டிட்வா’ புயலின் தாக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல தமிழ்ப் பெரும்பான்மை பகுதிகளில் மிகக் கடுமையாக உணரப்பட்ட நிலையில், அந்த சேதத்தின் பின்னால் இயற்கை காரணங்களைத் தாண்டி நீண்டகால நிர்வாகச் சீர்கேடுகளும் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பாசனத் திணைக்களம் போன்ற முக்கிய அரச நிறுவனங்களில் இருந்து அனுபவம் வாய்ந்த நடுத்தர நிலை நிர்வாகிகள் வெளியேறியமை, இந்தப் பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் மற்றும் பாசன அமைப்புகள் சரியாக நிர்வகிக்கப்படாமைக்கு வழிவகுத்திருக்கலாம் என்றார்.
ஜனவரி 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ‘தினன தகுனு’ மன்றக் கருத்தரங்கில் உரையாற்றிய ரணவக்க, மகாவலி திட்டத்தின் கீழ் வரும் பல நீர்த்தேக்கங்களும், கால்வாய் அமைப்புகளும் தமிழ்ப் பகுதிகளில் அமைந்துள்ள போதும், அவற்றை நிர்வகிக்க தேவையான தொழில்நுட்ப அறிவும் உள்ளூர் அனுபவமும் கொண்ட அதிகாரிகள் இன்று அந்த அமைப்புகளில் இல்லை என்பதே உண்மை எனக் கூறினார். நீண்ட காலமாக தொடரும் ‘brain drain’ காரணமாக, அனுபவம் பெற்ற பொறியாளர்கள் மற்றும் நடுத்தர நிலை நிர்வாகிகள் வெளிநாடுகளுக்கும், தனியார் துறைக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். இதன் விளைவாக, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்ட கட்டுப்பாடு, அவசர கால நீர் வெளியேற்றத் திட்டமிடல், கீழ்நிலை கிராமங்களுக்கு முன்னறிவிப்பு வழங்குதல் போன்ற முக்கிய பணிகள் பலவீனமடைந்துள்ளன என்றார்.
இந்த நிர்வாகப் பாழடைவு, ‘டிட்வா’ புயலின் போது தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள் மற்றும் விவசாய சேதங்களுடன் நேரடியாக தொடர்புடையதாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பல இடங்களில் நீர் தாமதமாக வெளியேற்றப்பட்டதாலும், ஒருங்கிணைந்த நிர்வாக முடிவுகள் எடுக்கப்படாததாலும், கீழ்நிலைப் பகுதிகளில் வாழும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உள்ளூர் மட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது இயற்கை பேரழிவுகள் சமூக ரீதியாக எவ்வாறு சமமற்ற தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கப்படுகிறது.
ரணவக்கின் இந்த கருத்துக்கள், மகாவலி திட்டத்தின் நிர்வாகம் மற்றும் அதன் பிராந்திய விளைவுகள் குறித்து நீண்ட காலமாக எழுந்துவரும் விமர்சனங்களை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வருகிறது. மகாவலி திட்டம் வரலாற்று ரீதியாக தேசிய அபிவிருத்தித் திட்டமாக முன்வைக்கப்பட்ட போதும், அதன் நிர்வாகத் தீர்மானங்கள் மற்றும் மனித வள மேலாண்மை குறைபாடுகள், குறிப்பாக தமிழ்ப் பெரும்பான்மை பகுதிகளில் அதிகமான பாதிப்புகளை உருவாக்கியுள்ளன என்ற வாதம் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. ‘டிட்வா’ புயல் அந்த மறைந்திருந்த பலவீனங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகவே அவரது உரை வாசிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியால் சிதைந்துள்ள அரச சேவை கட்டமைப்பில், அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளை இழந்துள்ள மகாவலி மற்றும் பாசனத் துறை போன்ற நிறுவனங்கள், காலநிலை மாற்றத்தால் தீவிரமடையும் பேரழிவுகளை எதிர்கொள்ள எவ்வளவு தயார் நிலையில் உள்ளன என்பதே இப்போது எழும் மையக் கேள்வி. குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு போன்ற ஏற்கெனவே வரலாற்று, பொருளாதார மற்றும் சமூக புறக்கணிப்பை அனுபவித்த பகுதிகளில், இந்த நிர்வாகத் தோல்விகள் இயற்கை பேரழிவுகளை மனிதாபிமான நெருக்கடிகளாக மாற்றிவிடுகின்றன என்பதையும் ‘டிட்வா’ புயல் தெளிவாகக் காட்டியுள்ளது
No Comments Yet...