72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை
18 வயதுக்கு குறைவான 36 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபர் ஒருவர் குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
பேராதனை பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், கண்டியிலிருந்து ஒருவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த மின்னணு சாதனங்களை (டிஜிட்டல் சாதனங்கள்) பரிசோதனை செய்த போது, 36 சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய காணொளி மற்றும் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் போது, சந்தேகநபர் சிலரின் உதவியுடன், பாதிக்கப்பட்ட சிறார்களுடன் மேற்கொண்ட பாலியல் செயல்களை காணொளியாக பதிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் பாலியல் சம்மத வயது 18 ஆகும் என்பதும் போலீசார் நினைவூட்டினர்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், சந்தேகநபரை 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைத்துக் கொண்டு மேலதிக விசாரணை நடத்துவதற்கான உத்தரவை நீதிமன்றத்திடம் இருந்து பெற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
38 வயதுடைய குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்த வழக்கிற்கான மேலதிக விசாரணைகள் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) இமேஷா முத்துமாலாவின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
No Comments Yet...