பல சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், பொருளாதார நிலைத்தன்மையை மீட்டெடுத்துக்கொண்டே எமது நாடு உறுதியான முன்னேற்றப் பாதையில் பயணித்து வரும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில், 78வது தேசிய சுதந்திர தினத்தை நாம் நினைவுகூருகிறோம்.
இலங்கை மக்களாகிய நாம், எமது கூட்டு முயற்சிகளும் போராட்டங்களும் மூலமாக, கடந்த சுமார் பதினெட்டு மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் கணிசமான பொருளாதார முன்னேற்றங்களை அடைய முடிந்துள்ளது. பல்வேறு சிரமங்களுக்கிடையிலும், ஒன்றிணைந்த உறுதியுடனும் பொறுப்புடனும் செயல்பட்டதன் மூலம், சுத்தமான மற்றும் கொள்கைநேர்மையைக் கொண்ட அரசியல் பண்பாட்டால் அடையாளம் காணப்படும் ஒரு நாட்டாக இலங்கையை சர்வதேச அரங்கில் மீண்டும் நிலைநாட்ட முடிந்துள்ளது. நேர்மையுடன் எழுந்து நிற்கும் அழகிய நாடாக இலங்கை இன்று மீளுருவாகி வருகிறது.
எமது அடுத்த முக்கிய இலக்கு, நாம் அடைந்துள்ள மாக்ரோ பொருளாதார முன்னேற்றங்கள், இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் வாழும் அனைத்து இன சமூகங்களுக்கும் சமமாகச் சென்றடைவதை உறுதி செய்வதாகும். இதனை அடையாமல், நாம் கட்டியெழுப்ப முயலும் புதிய வளர்ச்சி செயல்முறையின் உண்மையான தாளமும் சாரமும் நிறைவேறாது என்பதில் நாம் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
சமீப காலத்தில், எமது காலத்தின் மிகப்பெரிய இயற்கை பேரழிவை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த அனுபவம் வேதனையளித்திருந்த போதிலும், கடந்த பதினெட்டு மாதங்களில் நாம் அமைத்துள்ள வலுவான அடித்தளங்கள் காரணமாக, அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் வெற்றிகரமாக முன்னேற முடிந்துள்ளது.
சுதந்திரம் பெற்றதிலிருந்து கடந்த காலப்பகுதியில், எமது நாடு பலமுறை சரியான பாதையில் நகரவும், தேசிய இலக்குகளை அடையவும், ஒற்றுமையுடன் வாழவும் கிடைத்த பொன்னான வாய்ப்புகளை இழந்துள்ளது. ஆனால் இம்முறை, அந்தத் தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம் என்ற உறுதியுடன் நாம் செயல்பட்டு வருகிறோம். இதுவரை இல்லாத அளவிற்கு முன்னேற்றமடைந்த, தாங்குதன்மை கொண்ட, கண்ணியமிக்க ஒரு அரசாக இலங்கையை உயர்த்துவதற்காக நாம் உறுதியான தீர்மானத்துடன் உழைத்து வருகிறோம்.
இந்த முயற்சி, எமது பெருமைக்குரிய பண்பாடு, பண்டைய வரலாறு மற்றும் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை பாதுகாத்துக்கொண்டே, அவற்றின் மீது உறுதியாக நின்றபடியே மேற்கொள்ளப்படுகிறது என்பதைக் குறிப்பாக வலியுறுத்த விரும்புகிறேன்.
இருபதாம் நூற்றாண்டில் பிறந்து பின்னர் மங்கலடைந்த ஒரு பெருமைமிக்க தேசத்தின் கனவை, இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நனவாக்குவதன் மூலம், எமது மக்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சியடைந்த, செழிப்பான மற்றும் ஒழுக்கமிக்க இலங்கையை நாம் கட்டியெழுப்ப முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தப் பயணத்தில், எமது அனைத்து குடிமக்களினதும் வலிமை, கூட்டு மனப்பான்மை மற்றும் தளராத குணநலனின் மீது நாம் முழுமையான நம்பிக்கையை வைத்துள்ளோம்.
கடந்த நூற்றாண்டில் இழந்த வெற்றிகளை மீண்டும் எமது தேசத்திற்காக மீட்டெடுக்கும்போது, ‘செழித்த நாடு – அழகிய வாழ்க்கை’ என்ற எமது பொதுக் கனவை நனவாக்க, ஒற்றுமையுடனும் உறுதியுடனும் சகோதரத்துவத்துடனும் அனைவரும் கைகோர்த்து இணைந்து செயல்படுமாறு மீண்டும் ஒருமுறை அனைத்து குடிமக்களையும் அழைக்கிறேன்.
இந்த அழைப்புடன், சுதந்திரத்தின் உண்மையான இலக்குகளுக்குத் தங்களை முன்னேற்ற ஊக்கமளிக்கும் ஒரு அர்த்தமுள்ள தேசிய சுதந்திர தினமாக இது அமைய, எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனுர குமார திஸாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
No Comments Yet...