-
பிப்ரவரி 4 முதல் 11 வரை கொழும்பு கங்காராமய விகாரையில் புனித திருவெச்சங்கள் காட்சிக்கு
-
இந்திய பிரதிநிதிக் குழுவை குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி வழிநடத்துகின்றனர்
2025 ஏப்ரலில் இலங்கைக்கு மேற்கொண்ட தனது விஜயத்தின் போது இந்திய பிரதமர் முன்வைத்த பார்வையின் தொடர்ச்சியாக, பகவான் புத்தரின் புனித தேவ்னிமோரி திருவெச்சங்களை இலங்கையில் பொதுமக்கள் வணக்கத்திற்காகக் காட்சிப்படுத்துவதன் மூலம், இந்தியா ஆன்மீகப் பரப்புரை மற்றும் பண்பாட்டு தூதரகத்தின் (Cultural Diplomacy) ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
தற்போது வதோதராவில் உள்ள மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தப் புனித திருவெச்சங்கள், 2026 பிப்ரவரி 4 முதல் 10 வரை கொழும்பில் பொதுமக்கள் வணக்கத்திற்காக வைக்கப்படவுள்ளன. பிப்ரவரி 11 அன்று அவை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளன. புத்தமதத்தின் பிறப்பிடமான இந்தியா, தனது நாகரிகப் பொறுப்பை நிறைவேற்றும் வகையிலும், இந்தியா–இலங்கை இடையிலான ஆழமான ஆன்மீக, பண்பாட்டு மற்றும் மக்கள்–மக்கள் உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் புனித திருவெச்சங்களுடன், குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி, மூத்த பௌத்த பிக்குகள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட இந்திய பிரதிநிதிக் குழுவும் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. புனித திருவெச்சங்களுக்குரிய மரியாதையை கருத்தில் கொண்டு, இந்திய விமானப்படையின் சிறப்பு விமானத்தில் முழுமையான அரச மரியாதையுடன் அவை கொண்டு வரப்படுகின்றன. இது, இந்தியா தனது புனித பாரம்பரியத்திற்கு அளிக்கும் மரியாதையை வெளிப்படுத்துகிறது.
பிரதிநிதிக் குழு, கொழும்பில் நடைபெறும் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு மத, பண்பாட்டு மற்றும் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளது. அதேசமயம், இந்தியாவின் பௌத்த பாரம்பரியத்தையும், அதன் சமகால பண்பாட்டு தொடர்புகளையும் எடுத்துரைக்கும் கண்காட்சிகளும் நடத்தப்படவுள்ளன.
இந்தப் புனித திருவெச்சங்கள், இலங்கையின் மிகப் புகழ்பெற்ற மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பு கங்காராமய விகாரையில் பொதுமக்கள் வணக்கத்திற்காக வைக்கப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வண. ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் அவர்களால் நிறுவப்பட்ட இந்த விகாரை, இன்று வழிபாடு, கல்வி மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்தின் மையமாக விளங்குகிறது. புத்தமதம் இலங்கையின் பண்பாட்டு, வரலாற்று மற்றும் அன்றாட வாழ்வியலில் ஆழமாக ஊடுருவியிருக்கும் நிலையில், இந்தக் கண்காட்சி நாட்டுமுழுவதும் உள்ள பக்தர்களிடையே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவ்னிமோரி திருவெச்சங்கள், குஜராத் மாநிலத்தின் அரவல்லி மாவட்டத்தில், ஷம்லாஜி அருகே அமைந்துள்ள தேவ்னிமோரி தொல்லியல் தளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை. 1957ஆம் ஆண்டு பிரபல தொல்லியலாளர் பேராசிரியர் எஸ். என். சௌத்ரி மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில், கிறிஸ்தவ ஆண்டுகளின் ஆரம்ப நூற்றாண்டுகளில் மேற்கு இந்தியாவில் புத்தமதம் செழித்திருந்ததை உறுதிப்படுத்தும் முக்கியமான கட்டிடங்களும் திருவெச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த திருவெச்சங்கள், வெறும் தொல்லியல் பொக்கிஷமாக மட்டுமல்லாமல், அஹிம்சை, கருணை, சமாதானம் ஆகிய புத்தரின் காலத்தைக் கடந்த போதனைகளின் உயிர்ப்பான சின்னமாகவும் விளங்குகின்றன.
தேவ்னிமோரி ஸ்தூபியில் இருந்து 24 அடி உயரத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தப் புனிதப் பெட்டி, பச்சை ஷிஸ்ட் கல்லால் உருவாக்கப்பட்டது. அதில் பிராமி எழுத்திலும் சமஸ்கிருத மொழியிலும்
“தசபல சரீர நிலைய” (புத்தரின் உடல் திருவெச்சங்கள் தங்கிய இடம்) என பொறிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டிக்குள், புனித சாம்பல்கள், பட்டுத் துணி, மணிகள் அடங்கிய செம்புப் பெட்டி காணப்படுகிறது.
இன்று இந்தப் புனித திருவெச்சங்கள், காற்று புகாத கண்ணாடி உறையுடன் கூடிய டெசிக்கேட்டரில் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் சீரழிவைத் தடுக்கும் வகையில், அவை பருத்தி அடிப்படையின் மீது வைக்கப்பட்டுள்ளன.
ஆன்மீக முக்கியத்துவத்தைத் தாண்டி, இந்தத் திருவெச்சக் கண்காட்சி இந்தியாவின் பண்பாட்டு தூதரக முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாகவும் விளங்குகிறது. இலங்கையுடன் தனது மிகப் புனிதமான புத்த பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், இந்தியா இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் நம்பிக்கை, வரலாறு மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் மீது தங்கியுள்ளன என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
இது இந்தியாவின் மென்மையான சக்தி (Soft Power) பயன்பாட்டின் ஒரு வலுவான எடுத்துக்காட்டாக இருந்து, மக்கள்–மக்கள் தொடர்புகளை வலுப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதேசமயம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இது அமைகிறது.
சமீப ஆண்டுகளில், புத்தரின் புனித திருவெச்சங்கள் தாய்லாந்து, மங்கோலியா, வியட்நாம், ரஷ்யா, பூடான் போன்ற நாடுகளில் வெற்றிகரமாகக் காட்சிப்படுத்தப்பட்டு, கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்த்துள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சி, சமீபத்தில் இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்ட பிப்ராவா ரத்தின திருவெச்சங்கள் தொடர்பான நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்தக் கண்காட்சி மூலம், அஹிம்சை, கருணை, இணக்க வாழ்வு என்ற புத்த தம்மத்தின் உலகளாவிய செய்தியை இந்தியா மீண்டும் ஒருமுறை உலகிற்கு எடுத்துரைக்கிறது. தேவ்னிமோரி திருவெச்சங்களின் இலங்கைப் பயணம், அமைதியின் வலுவான சின்னமாகவும், பகிரப்பட்ட ஆன்மீக பாரம்பரியத்தின் கொண்டாட்டமாகவும், இந்தியா–இலங்கை இடையிலான நூற்றாண்டுகள் பழமையான நட்பின் மறுபடியும் உறுதிப்படுத்தலாகவும் விளங்குகிறது.
No Comments Yet...