ஒன்றிணைந்த கட்டுப்பாட்டு அமைப்பு அவசியம் – இலங்கை ஃபின்டெக் உச்சி மாநாட்டில் தீர்மானம்**
பின்னணி செய்தி
இலங்கையின் நிதி தொழில்நுட்பத் துறையை (Fintech) புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்குடன் நடைபெற்ற முதலாவது “இலங்கை ஃபின்டெக் உச்சி மாநாட்டில் (2025) வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த மாநாட்டின் முடிவில், நாட்டின் நிதி அமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய இரண்டு முக்கிய தேசிய முன்னுரிமைகள் ஒருமித்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவை கணிசமாகக் குறைப்பது மற்றும் நிதி தொழில்நுட்பத் துறைக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அதிகார அமைப்பை உருவாக்குவது ஆகியவை முதன்மை இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புடன் (GDP) ஒப்பிடுகையில் புழக்கத்தில் உள்ள பணத்தின் விகிதத்தை தற்போதைய 4.5 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாகக் குறைப்பதற்கான தெளிவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் பணமில்லா, இலத்திரனியல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இந்த இலக்கை அடைவதற்காக, தற்போது அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும் துறைகள் மீது கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து சேவைகள், மின்சாரம் மற்றும் நீர் உள்ளிட்ட பொதுச் சேவைகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (SME) சார்ந்த கொடுப்பனவுகள் ஆகிய துறைகள் இலத்திரனியல் முறைக்கு மாற்றப்படவுள்ளன. இதன் மூலம் தினசரி பணப் பயன்பாட்டை குறைத்து, பாதுகாப்பான மற்றும் விரைவான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புற மற்றும் குறைந்த வசதிகள் உள்ள பகுதிகளிலும் டிஜிட்டல் நிதி சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் போன்ற அரச மற்றும் சமூக அமைப்புகள் மூலமாக இலத்திரனியல் அணுகலை அதிகரிக்கவும் மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
நிதி தொழில்நுட்பத் துறையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, தற்போது பல்வேறு நிறுவனங்களின் கீழ் சிதறிக்கிடக்கும் கட்டுப்பாட்டு நடைமுறைகளை ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் குறித்தும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதற்காக, நிதி தொழில்நுட்பத் துறைக்கென தனியான, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அதிகார அமைப்பை உருவாக்க அரசாங்கத்திடம் வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அமைப்பு, அனுமதி வழங்கல் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஃபின்டெக் மன்றத்தின் தலைவர் சன்ன டி சில்வா, மாநாட்டின் முடிவுகளை விளக்குகையில், “எங்கள் உறுப்பினர்கள் வெறும் கலந்துரையாடல்களுடன் அல்லாமல், தெளிவான செயல்திட்டங்களுடன் மாநாட்டை விட்டு செல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது” என தெரிவித்தார். மத்திய வங்கி உள்ளிட்ட கட்டுப்பாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற மூடப்பட்ட கலந்தாய்வுகள் மூலமாக, அளவிடக்கூடிய செயல்திறன் குறியீடுகள், தெளிவான இலக்குகள் மற்றும் துறைக்கான பொதுவான திசை நிர்ணயம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த உச்சி மாநாட்டின் முடிவுகள், இலங்கையில் நிதி தொழில்நுட்பத் துறையில் வெறும் கருத்துப் பரிமாற்ற நிலையிலிருந்து செயல்படுத்தும் கட்டத்திற்கான மாற்றத்தை குறிக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய, திறன் வாய்ந்த மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் நிதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முக்கிய அடித்தளமாக இந்த தீர்மானங்கள் அமையும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
No Comments Yet...