தன்னார்வ ஓய்வு திட்டம் தொடர்பில் நெருக்கடி**
வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாக ஊழியர்கள் புகார் –
மின் துறை சீர்திருத்த செயலகத் தலைவர் பதவி விலகல்
பின்னணி விசாரணை செய்தி
இலங்கை மின்சார சபை (CEB) பிளவுபடுத்தப்பட்டு புதிய நிறுவனங்களாக மாற்றப்படும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தன்னார்வ ஓய்வு திட்டம் (VRS) தொடர்பில் கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஓய்வு பெற முடிவு செய்துள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார சபை ஊழியர்கள், தங்களை உடனடியாக சேவையிலிருந்து வெளியேற அனுமதிக்காமல் நிர்வாகம் கட்டாயமாக தடுத்து வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி, மின்சக்தி அமைச்சர் முன் நேற்று முறையிட்டுள்ளனர்.
தன்னார்வ ஓய்வு திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் இளம் மற்றும் நடுத்தர வயதுடைய தொழில்முறை ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இவர்கள், புதிய அமைப்புகளுக்கு இடமாற்றம் செய்ய மறுத்ததன் அடிப்படையில் சட்டபூர்வமாக ஓய்வு பெற உரிமையுள்ளவர்கள் எனக் கூறுகின்றனர். எனினும், தற்போது அந்த உரிமை நடைமுறையில் மறுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மின் துறை சீர்திருத்த செயலகத்தின் (Power Sector Reforms Secretariat – PSRS) பணிப்பாளர் நாயகம் புபுடு நிரோஷன் ஹெடிகல்லகே, 2026 ஜனவரி 15 முதல் அமலுக்கு வரும் வகையில் தனது பதவி விலகலை சமர்ப்பித்துள்ளமை, ஊழியர்களிடையே மேலும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக புதிய நியமனம் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், இது “மிக முக்கியமான தருணத்தில் உருவான ஆபத்தான தலைமை வெற்றிடம்” என ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மின் துறை சீர்திருத்த செயலகம், இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்தல், மின்உற்பத்தி, மின்பரிமாற்றம் மற்றும் மின்விநியோகம் ஆகிய பணிகளை தனித்தனி நிறுவனங்களாகப் பிரித்தல், மேலும் மின் துறையை செயல்திறன் மிக்கதாக மாற்றுதல் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ள முக்கிய அரச அமைப்பாகும்.
அரசாங்கத்தின் மின்துறை மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்பின் மூலம் தன்னார்வ ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் கீழ், இலங்கை மின்சார சபையைப் பிளவுபடுத்தி, “எலெக்ட்ரிசிட்டி ஜெனரேஷன் லங்கா (தனியார்) லிமிடெட்”, “தேசிய மின்பரிமாற்ற வலையமைப்பு சேவை வழங்குநர் (தனியார்) லிமிடெட்”, “தேசிய அமைப்பு இயக்குநர் (தனியார்) லிமிடெட்” மற்றும் “எலெக்ட்ரிசிட்டி டிஸ்டிரிப்யூஷன் லங்கா (தனியார்) லிமிடெட்” எனும் நான்கு புதிய நிறுவனங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
சட்டத்தின் படி, தற்போதைய மின்சார சபை ஊழியர்களுக்கு, இந்த புதிய நிறுவனங்களில் இணைவதா அல்லது தன்னார்வ ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேறுவதா என்பதை தீர்மானிக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாக, மின்சக்தி அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சட்டப்பூர்வ கட்டமைப்பின்படி, சுமார் 2,200 ஊழியர்கள் 2025 அக்டோபர் 27க்குள், புதிய நிறுவனங்களில் இணைவதில்லை என்ற தங்கள் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறிருக்க, “எங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட தன்னார்வ ஓய்வு உரிமை நடைமுறையில் மறுக்கப்படுகிறது. நிர்வாகம் எங்களை கட்டாயமாக சேவையில் தடுத்து வைத்துள்ளது” என ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலை காரணமாக, அவர்கள் சட்டப்படி ஓய்வு பெறவும், தனியார் துறையில் வேலை ஏற்கவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும், அல்லது சுயதொழில் உள்ளிட்ட மாற்று வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடவும் முடியாத நிலை உருவாகியுள்ளது.
“எங்கள் பிரச்சினை இழப்பீடு தொகை குறித்து மட்டுமல்ல. அது பின்னர் வழங்கப்படலாம். ஆனால் இப்போது சேவையிலிருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் அவசர கோரிக்கை” என அவர்கள் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
மின்சக்தி அமைச்சு, 2026 பெப்ரவரி 1 ஆம் திகதியை, அனைத்து சொத்துக்களும் புதிய நிறுவனங்களுக்கு முழுமையாக மாற்றப்படும் இலக்கு திகதியாக (appointed date) நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், அந்த திகதி இதுவரை அரசிதழில் வெளியிடப்படவில்லை என ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் காரணமாக, புதிய நிறுவனங்களுக்கு சட்டபூர்வ அதிகாரம் கிடைக்காமல் இருப்பதாகவும், ஊழியர்கள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக சேவையில் தடுத்து வைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் நிறுவனத்தின் செயல்திறன் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
முன்னதாக, மின் துறை சீர்திருத்த செயலகத்தின் பணிப்பாளர் நாயகம், பெப்ரவரி 1, 2026 அன்று இலக்கு திகதி அறிவிக்கப்படும் என வாய்மொழி உறுதியளித்திருந்ததாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் தற்போது பதவி விலகியுள்ள செய்தி, நிலவும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
“எங்களில் பலர், வெளிநாட்டு குடியேற்றம் அல்லது தொழில் தொடக்கம் போன்ற வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை இந்த அமைப்பின் மீது வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் எடுத்தோம்” என அவர்கள் கூறுகின்றனர். தற்போது, விசா விண்ணப்பங்கள் உறுதி செய்ய முடியாமை, ஜனவரி–பெப்ரவரி மாதங்களில் தனியார் துறையில் கிடைத்த வேலை வாய்ப்புகளை இழத்தல், குடும்பங்களின் மீது கடும் நிதி மற்றும் மனஅழுத்தம் ஆகிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
மேலும், வெளிநாடு சென்றுள்ள சில தன்னார்வ ஓய்வு ஊழியர்களுக்கு “பதவியை விட்டு விலகியதாக” (vacation of post) கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது அவர்களின் ஓய்வு உரிமைகளை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். சிலருக்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் தன்னார்வ ஓய்வு விண்ணப்பங்களை வாபஸ் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நீண்டகால உறுதியற்ற நிலை, தேசிய மின் நிறுவனம் என்ற வகையில் இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகளை முடக்கி வருவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். “இனி சேவையில் தொடர விரும்பாத ஊழியர்களை கட்டாயமாக வைத்திருப்பது, நிறுவனத்திற்கோ நாட்டிற்கோ எந்த உற்பத்தி பயனையும் அளிக்காது” என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதன் அடிப்படையில், இலக்கு திகதியை 2026 பெப்ரவரி 1க்கு முன் அல்லது அதே நாளில் அரசிதழில் வெளியிடவும், தன்னார்வ ஓய்வு திட்டத்தைத் தேர்ந்தெடுத்த ஊழியர்கள் தங்கள் உரிமைகளுக்கு பாதிப்பு இன்றி சேவையிலிருந்து வெளியேற அனுமதிக்கவும், வெளிநாட்டில் உள்ள ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவும் மின்சக்தி அமைச்சரிடம் அவர்கள் அவசரமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
No Comments Yet...